பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 67. வினைத்திட்பம்

அஃதாவது, தூயவினை செய்வானுக்கு வேண்டிய மனத்திண்மை. அதிகார முறையும் இதனால் விளங்கும். திண்- திண்பு-திட்பு-திட்பம். திண்மை திணுக்கத்தால் (செறிவால்) ஏற்படும் உறுதி.

 

வினைத்திட்பம் மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.

 

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்-வினை செய்வதில் திண்மை என்பது அதைச் செய்பவனின் மனத்திண்மையே; மற்றைய எல்லாம் பிற-அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா.

மற்றைய பிற வாவன குடி, படை, அரண், நட்பு என்பவற்றின் திண்மைகள். அவையும் வேண்டுமாயினும், செய்வானின் மனத்திண்மை யில்லாவிடத்து அவை பயன்படாவாதலின் 'மற்றையவெல்லாம் பிற' என்றார்.