பக்கம் எண் :

சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.

 

சொல்லுதல் யார்க்கும் எளிய-ஒரு வினையை இன்ன கருவியால் இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று வழி சொல்வது எவருக்கும் எளிதாம்; சொல்லிய வண்ணம் செயல் அரிய ஆம்-ஆனால், சொன்னவாறு அதைச் செய்து முடிப்பது பெரும்பாலார்க்கு அரிதாம்.

சொல்லுதலும் செய்தலும் சொல்வார் செய்வார் பன்மைபற்றிப் பன்மையாகிப் பன்மைவினை கொண்டன. ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், அரிது என்பது ஒரு சிலர் அரும்பாடு பட்டுச் செய்துமுடித்தலையும், பெரும்பாலார் எப்பாடு பட்டும் செய்ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப் பெறும். இனி, எதிர் நிலை (அருத்தாபத்தி) யளவையால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்.