பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 68. வினைசெயல்வகை

அஃதாவது, வினைத்திண்மையுடைய அமைச்சன் வினை செய்யும் வகை. அதிகார முறையும் இதனால் விளங்கும்.

 

சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
தாழ்ச்சியுட் தங்குத றீது.

 

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்-ஒன்றைப்பற்றி ஆராய்ந் தெண்ணுவதன் இறுதியாவது, இதை இன்னவாறு செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொள்ளுதலே; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது-அத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றாது காலங்கடத்துவது குற்றமாகும்.

சூழ்ச்சி எதிர்ப்பும் தற்காப்பும் பற்றியதாயின், இதை எங்ஙனஞ் செய்வதென்பதே ஆராயப்படுவதாம். தாக்குதல் பற்றியதாயின், செய்வதா விடுவதா என்பதே முதற்கண்ணும், செய்வதாயின் அதை எங்ஙனஞ் செய்வதென்பது அதன் பின்னும், ஆராயப்படுவனவாம். ஆகவே, உடன்பாட்டுத்தீர்மானமே 'தாழ்ச்சியுள் தங்குதல்தீது' என்பது அறியப்படும். 'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்' எனவே, துணிவெய்தும் வரை சூழவேண்டு மென்பதும், துணிவில் முடியாதவாறும் துணிவு காலந்தாழ்க்குமாறும் சூழ்வது தீங்குவிளைக்குமென்பதும், பெறப்படும். துணிந்த வினையை உடனே தொடங்காவிடின், தகுந்த காலந்தப்புதலாலும் ஊக்கங் குன்றுதலாலும் பகைவர் அறிந்தழித்தலாலும் வினைகெடுமாதலான், 'தாழ்ச்சியுள் தங்குதல் தீது' என்றார்.