பக்கம் எண் :

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

 

தூங்கிச் செயல் பால தூங்குக-மெள்ளச் செய்ய வேண்டிய வினைகளை மெள்ளச் செய்க; தூங்காது செய்யும் வினைதூங்கற்க-விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விரைந்து செய்க.

மெள்ளச் செய்தல் காலந்தாழ்த்துச் செய்தலும் காலம் நீடச் செய்தலும் என இருவகை. இவற்றுள் முன்னது வினை தொடங்கலையும் பின்னது வினைசெயல் முழுவதையும் பற்றியனவாம். மெள்ளச் செய்ய வேண்டியதை விரைந்தும் விரைந்து செய்ய வேண்டியதை மெள்ளவும் செய்யின், அவற்றால் தீமையே விளையும் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.