பக்கம் எண் :

வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்.

 

நினையுங்கால்-ஆராய்ந்து பார்க்குமிடத்து; வினை பகை என்ற இரண்டின் எச்சம்-செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டு வைத்த குறை; தீ எச்சம் போலத் தெறும்-அவிக்காது விட்டு வைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டுவைத்தவரை அழித்து விடும்.

பல பெரும் பகைவரை அடக்கியதொடு பொத்திகை(திருப்தி)யடைந்து ஒரு சிறு பகைவனை விட்டுவைப்பது பகை யெச்சமாம். பகையொடு சேர்த்துக் கூறியதாலும், 'தீயெச்சம் போலத்தெறும்' என்றதனாலும், வினை யென்றது கேட்டை நீக்கும் வினையை என்பது அறியப்படும். வெள்ளக் காலத்திற் பெருங் குளக்கரை யுடைப்பையெல்லாம் அடைத்தவர் ஒரு சிறு கசிவை விட்டுவைப்பதும், கொடிய நோய்க்கு மருத்துவம் செய்து கொள்பவன் ஒரு சிறு பகுதியைப் புறக்கணிப்பதும், வினையின் எச்சத்திற்கு எடுத்துக் காட்டாம். இனி இக்குறை என்ன செய்யும் என்றிகழாது முடியச் செய்க என்பதாம். இது வலியனுக்குரிய வினை. இனி, வினையெச்சம் என்பது தோற்றோடிய பகைவனைத் தொடராது விட்டுவிடும் போர்வினையெச்சம் எனலுமாம்.