பக்கம் எண் :

முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

 

முடிவும்-வினை முடிதற்கு வேண்டிய முயற்சியும்; இடையூறும்-அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும்; முற்றிய ஆங்கு எய்தும் படுபயனும்-தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும்; பார்த்துச் செயல்-ஆராய்ந்து பார்த்து வினைசெய்க.

பெரும்பயன் எனவே சிறுபயன்வினை விலக்கப் பட்டதாம். 'படு' என்னும் சொல் பெருமை அல்லது மிகுதிப்பொருள் தருவதைப் படுகுழி, படுதண்டம், படுபொய், படுமோசம் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'முடிவு' ஆகுபெயர். முற்றியாங்கு (முற்றிய ஆங்கு) - முற்றியபோது.