பக்கம் எண் :

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.

 

ஒட்டாரை ஒட்டிக் கொளல்-வினைதொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாதவரைத் தனக்கு நட்பாக்கிக்கொள்ளுதல்; நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே-தன் நண்பருக்கு இனியன செய்தலினும் விரைந்து செய்யப்பட வேண்டியதே.

உண்மையானவரும் பழகியவருமான நண்பர் தன்னை விட்டு நீங்காராதலானும், அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்பைச் சற்றுக்காலந்தாழ்த்துச் செய்யினும் பொறுத்திருப்ப ராதலானும், பகைவருடன் பொருந்தாதவரை உடனே தன்னொடு சேர்த்துத் கொள்ளாவிடின் பகைவர் அவர் விரும்பியதைக் கொடுத்துத் தம்வயப்படுத்திக் கொள்வ ராதலானும், 'நட்டார்க்கு நட்ட செயலின் விரைந்ததே' என்றார். இனி, இதுவரை தன்னொடு ஒட்டாரை ஒட்டிக்கொளல் எனினுமாம். ஏகாரம் தேற்றம். இக்குறளிரண்டும் மெலியன் செயல் கூறின.