பக்கம் எண் :

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

 

தம்மின் - தம்மினும் மிகுதியாக; தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்கள் கல்வியறிவுடையராயிருத்தல் ; மாநிலத்து மன் உயிர்க்கொல்லாம் இனிது - பெற்றோராகிய தமக்கு மட்டுமன்றி இம்மண்ணுலகத்துள்ள மற்றெல்லா மக்கட்கும் இன்பந் தருவதாம்.

மன் = மாந்தன் (OE,OS,OHG man, Skt. மநு). மன்பதை = மக்கட் கூட்டம். மன்னுயிர் என்பது இருபெயரொட்டு. மக்கள் கல்வியறிவில் அவையோரின் மட்டுமன்றிப் பெற்றோரினும் விஞ்சியிருக்கலாமென்பது கருத்து. தந்தையும் கற்றோனாகவும் அவையத்து முந்தியிருப்பவனாகவு மிருக்கலா மாதலால், "தந்தையினும் அவையத்தா ருவப்பர்". என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது.