பக்கம் எண் :

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

 

குறிப்பு அறிந்து-அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செய்தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பையறிந்து;காலம் கருதி-சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி;வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல்-அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க.

கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது காமம் பற்றிய அவலமும், பகையரசர் இகழ்ந்து ஓலைவிடுத்தபோது வெகுளியும் பிறந்து, வேறு செய்தி சொல்வார்மீது வெறுப்பையும் சினத்தையும் விளைக்குமாதலின்,'குறிப்பறிந்து' என்றும்; வேட்டையாடவும் உரிமை மகளிரொடு விளையாடவும் கருதியபோது, போர்தவிர வேறெச்செய்தியிலும் மனம் பதியாதாகலின்,'காலங்கருதி'என்றும் கூறினார்.அரண்மனைப் பொற்கொல்லன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை அவன் தேவி ஊடிய காலத்துக்கண்டதும், அவ்வூடல் நீங்குதற் கேதுவான செய்தியுடைமை பற்றியே.

"அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்"

(638)

என்றமையால்,இங்கு'வெறுப்பில' என்றது வினைக்குரியன அல்லாதவற்றை யென அறிக. அரசர் தெய்வத் தன்மை யுடையராதலின்,இன்பமாகச் சுருக்கியும் விளக்கியும் சொல்லுக வென்பார்'வேட்பச் சொலல்' என்றார்.