பக்கம் எண் :

கொள்ளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

 

துளக்கு அற்ற காட்சியவர்-நிலைத்த உறுதியான அறிவினையுடையார்;கொளப்பட்டோம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்-யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் என்று கருதித் தம் நிலைமையொடு பொருந்தாதவற்றைச் செய்யார்.

நிலைமை யுயர்ந்தபின் தம் பழைய நிலைமையை நினைத்து முன் போன்றே தாழ்மையாய் ஒழுகாது, "நன்னிக்குப் பதவி வந்தால் நள்ளிரவிற் குடைபிடிப்பான்." என்பதற் கிணங்கத் தலைகால் தெரியாது நடப்பவரே உலகத்துப் பலராதலின், என்றும் ஒரு தன்மையராக விருந்து மன்னர் விழைப விழையாது அவரிடத்து நின்ற வொளியோ டொழுகுபவரைத் 'துளக்கற்ற காட்சியர்' என்றார். காட்சி என்றது அகக்காட்சியை.