பக்கம் எண் :

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

 

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி-தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்கவைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி, மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம்மாறாவது; இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்-தன் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ்சொல்லை, அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.

சொல் என்றது சொல்லை வருவித்தலைக் குறித்தது. 'கொல்' ஐயம் குறித்த இடைச்சொல். தந்தை நெடுங்காலமாகச் செய்த பல்வேறு பெருநன்மைக்கும் மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று; ஒருவகை அணிநயம்படக் கூறினார். இதனால், தந்தை செய்த நன்றிக்குச் சரியாக ஈடுசெய்தல் அரிதென்பதும் , தென்புலத்தார் கடனைத் தீர்க்க நன்மக்களைப் பெறுதல் பெற்றோர்தம் விருப்பம்போற் செய்துகொள்ளக்கூடிய செயலன்றென்பதும், பெறப்படும்.