பக்கம் எண் :

பழைய மெனக் கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

 

பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை-அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் என்று கருதித் தமக்குத் தகாதவற்றைச் செய்யும் தவறான நட்புரிமை; கேடுதரும்-அமைச்சர் முதலியோர்க்கு அழிவைத்தரும்.

பழைமையாவது விளையாட்டுத் தோழமையும் கல்வித் தோழமையும். அரசப் பதவியேற்ற பின்பும் பழைய தோழமைபற்றிச் சமநிலை கொண்டாடிக் குற்றஞ் செய்யின், அரசர்பொறாது தண்டிப்பராதலின், 'கெழுதகைமை கேடுதரும்' என்றார். இம்முக்குறளாலும், இளமையும் நெருங்கிய தொடர்பும் பற்றி அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.