பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 71. குறிப்பறிதல்

அஃதாவது, அமைச்சர் முதலியோர் அரசரது உள்ளக்குறிப்பை அவர் முகக் குறிப்பால் அறிந்துகொள்ளுதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாத தாதலின், அதன் பின் வைக்கப்பட்டது. இதனால், அமைச்சர் முகக்குறிநூலும் (Physiognomy) கற்றிருக்கவேண்டுமென்பது குறிப்பாய்ப் பெறப்படும்.

 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி.

 

குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான் - அரசன் கருதிய கருமத்தை அவன் கூறாமலே அவன் முகத்தை நோக்கி அறியவல்ல அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - உலகுள்ள அளவும் ஒருபோதும் வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஓர் அணிகலமாம்.

குறிப்பு உள்ளத்திற் குறித்தது. நோக்குதல் நுணித்துப் பார்த்தல். முகம் என்பது முகத்திலுள்ள கண், கன்னம், மீசை, உதடு, பல், நா முதலிய வுறுப்புக்களைக் குறிக்கும். இவற்றுள் முதன்மையானது கண். உலகம் முத்தொழிற்படுதலின் 'உலகுள்ள அளவும்' என்றும்; ஞாலம் நீராற் சூழப்படாமல் அதைத் தன்னுள் ஒரு கூறாகக் கொண்டிருப்பதனாலும், நீராற் சூழப்பட்ட நிலப்பகுதி பலவாயிருப்பதனாலும், 'தன்னுட்கொண்ட ஞாலம்' என்றும்; கூறப்பட்டது. உலக முழுவதையுங் குறித்தற்கு 'மாறாநீர் வையம்' என்றார். கடலை 'மாறாநீர்' என்றது எதுகை நோக்கி. 'வையத்திற்கு' என்பதன் அத்துச் சாரியை தொக்கது. 'வையம்' என்பது மக்கள் வைகும் நிலப் பகுதிகளைமட்டுங் குறிப்பின், நீராற் சூழப்பட்ட என்று பரிமேலழகர் கூறியதும் பொருந்தும். 'குறிப்பு', 'வையம்' என்பன ஆகுபெயர். ஒண்மையும் நுண்மையுமுள்ள மதியினால் என்பதை முழுவதற்கும் அழகு செய்தலின், 'வையக் கணி' என்றார்.