பக்கம் எண் :

குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.

 

குறிப்பின் குறிப்பு உணர்வாரை-ஒருவரது முகக்குறிப்பினால் அவரது உள்ளக் குறிப்பை அறியவல்ல அமைச்சரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்-அரசர் தம் பத்துறுப்புக்களுள் எதை அவர் வேண்டினுங் கொடுத்துத் தமக்குத் துணையாகக் கொள்க.

'குறிப்பிற் குறிப்புணர்வாரை' என்பதற்கு, "தங்குறிப்பு நிகழுமாறறிந்து அதனாற்பிறர் குறிப்பறியுந் தன்மையாரை" என்று பொருளுரைத்து,"முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை" என்று உரைத்த மணக்குடவரையும், "அரசரது முகங்கொண்ட குறிப்பினான் அவர் யாதானும் ஒரு கருமத்தை அவர் உள்ளம் கொண்ட குறிப்பினை அறிவார் யாவர் மற்று அவர் தம்மை" என்று உரைத்த காலிங்கரையும், பரிமேலழகர் பழித்தது பொருந்தாது, குறிப்பு எல்லார்க்கும் ஒத்து நிகழாமையின். நாடு, ஊர்,ஆறு,மலை,யானை, குதிரை,தேர், முரசு, மாலை,கொடி என்பன அரசரின் பத்துறுப்புக்கள்(திவா.,பிங்.).