பக்கம் எண் :

குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்.

 

குறிப்பின் குறிப்பு உணராவாயின்-பிறர் முகத்திலும் முகவுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காணமாட்டாதனவாயின்;உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாகவுள்ள ஐம்புல வுறுப்புகளுள், காட்சியையே தம் புலனாகக் கொண்ட கண்கள் வேறென்ன பயன்படுவனவாம்?

'குறிப்பு' இரண்டனுள், முன்னது தோற்றமாகிய புறக்குறிப்பு; பின்னது கருத்தாகிய அகக்குறிப்பு. இரண்டும் தொழிலாகு பெயர். குறிப்பறிதற்கு இன்றியமையாத கருவியாதல்பற்றி, அறிவான் உணர்வு அவன் கண்ணாகிய உறுப்பின்மேல் ஏற்பட்டது. என்ன பயத்தவோ என்னும் வினா, ஒரு பயனுமில்லை யென்னும் விடையை வேண்டி நின்றது. இவ்விரு குறளாலும் குறிப்பறியமாட்டாரது இழிவு கூறப்பட்டது.