பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 8. அன்புடைமை

அஃதாவது, இல்லறத்தானும் அவன் வாழ்க்கைத் துணையுமாகிய, கணவனும் மனைவியும் தாம் பெற்ற மக்களிடத்துக் காட்டிய அன்பை, துறவோர்ப் போற்றல், விருந்தோம்பல், ஒப்புரவொழுகல், இல்லார்க் கீதல், இரப்போர்க்கிடுதல் முதலிய இல்லறவினைகள் நடைபெறற்கேற்ப பிறரிடத்தும் உடையராயிருத்தல். பிள்ளைகளைப் பெற்றவர்க்கே பிறரிடத்து அன்புண்டாகும் என்பது பொதுவான உலகக் கொள்கை.

 

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன் கணீர் பூசல் தரும்.

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்.

உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின் மேல் ஏற்றப்பட்டது.

இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்டகாலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக.