பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 72. அவையறிதல்

அஃதாவது, அமைச்சரும் தூதரும் அரசனோடிருக்கும் அவையின் இயல்பை அறிதல். தம் அரசனோடுள்ள அவையை ஏற்கனவே அறிந்திருப்பராதலால், இது சிறப்பாக வேற்றரசரின் அவையியல்பை அறிதலைப் பற்றியதாம்.

அவையினர் ஒற்றரல்லாத ஐம்பெருங் குழுவினரும் புலவரும் நண்பருமாவர். நல்லவை அல்லது நிறையவையென்றும், புல்லவை அல்லது குறையவை யென்றும், அவை இருதிறப்படும். அவற்றுள் முன்னது பேரறிஞர் கூட்டமும் பின்னது சிற்றறிஞர் கூட்டமுமாகும் . நல்லவைக்கு வல்லவை, நுண்ணவை என்றும் பெயர். இனி, சொல்வாரொடு ஒப்புநோக்கி உயர்வு, ஒப்பு, தாழ்வு எனவும் அவை முத்திறப்படும்.

வேற்றரசனிடத்தில் ஒன்றைச் சொல்வோர்க்கு அவன் குறிப்பறிதலேயன்றி அவன் அவையின் இயல்பை அறிதலும் வேண்டுதலின், இது குறிப்பறிதலின் பின் வைக்கப்பட்டது.

 

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.

 

சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்-சொல்லின் தொகுதியை அறிந்த தூய நடையினர்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக- தாம் ஒன்றை அரசனிடம் சொல்லும்போது, அவனோடிருந்த அவையின் திறத்தை அறிந்து அதற்கேற்ப ஆராய்ந்து சொல்லுக.

சொல்லின் தொகை யென்றது அமைச்சர்க்கும் தூதர்க்கும் தெரிந்திருக்கவேண்டிய சொற்றொகுதியை(vocabulary). தூய்மையென்றது, பிறமொழிச் சொல்லும் கொச்சைச் சொல்லும் வழூஉச் சொல்லும் இடக்கர்ச்(vulgar)சொல்லும் அவையல்(unparliamentary) கிளவியும் திசைச்(provincial) சொல்லுங் கலவாது, இயன்றவரை எல்லார்க்கும் விளங்குமாறு பேசும் தூய இலக்கண நடையை. அவையறிந்து சொல்லுதலாவது, அதன் திறத்திற்கேற்ப நடையை உயர்த்தியும் தாழ்த்தியும் இடைநிகர்த்தாகவும் பேசுதல். ஆராய்ந்து சொல்லுதலாவது, இரட்டுறலும் கவர்படலும் இடத்திற்கேற்காச் சொல்லும் குறிப்புச் சொல்லும் நீக்கி, வெளிப்படையாகவும் விளக்கமாகவும் கோவைபடச் சொல்லுதல். ஓரிடத்து நற்சொல் மற்றோரிடத்தில் இடக்கர்ச் சொல்லாக விலக்கப்படுதலால், இடத்திற்கேற்பவும் சொற்களை ஆளவேண்டிய நிலைமையுளதாம்.

செஞ்சொல் ஆகுபொருட் சொல் (இலக்கணைச் சொல்),குறிப்புச்சொல் என்பன சொல்லின் வகையேயன்றித் தொகையாகா.

திருவள்ளுவர் வேத்தியலொடு பொதுவியலையுஞ் சேர்த்தே கூறுவதால், பிற அவைகளிற் சொற்பொழிவாற்றும் அறிஞர்க்கும் இதுவே நெறியாகக் கொள்க.