பக்கம் எண் :

அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்.

 

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர்-தாம் பேசும் அவையின் திறத்தை யறியாது. அதன் முன் ஒன்று சொல்லுதலை ஏற்றுக்கொண்டவர்; சொல்லின் வகை அறியார்-சொல்லுதலின் கூறுபாட்டை அறியாதவராவர்; வல்லதும் இல்-அதோடு, அவர் கற்றுத் தேர்ந்த கலையும் அவர் கல்லாததாகக் கருதப்படும்.

கற்றோரவையில் உயர்ந்த நடையில் உயர்ந்த பொருள் பற்றியும், கல்லாரவையில் எளிய நடையில் எளிய பொருள் பற்றியும், பேசினாலன்றிச் சொற்பொழிவாற் பயனின்மையின், 'சொல்லின் வகையறியார்' என்றும்; அவைக்கு ஏற்காதவாறு பேசுவாரைப் பற்றி "இதையறியாதவர் வேறு எதையும் அறியார்," என்னும் கருத்துண்டாதலின், "வல்லதூஉம் இல்" என்றும் கூறினார். 'சொல்லின் வகை'யாவது,

"உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளச்"


சொல்லுதல். 'வல்லதூஉம்' இன்னிசை யளபெடை.