பக்கம் எண் :

ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.

 

வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு -பரந்த நூற்பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞரவையில் வல்லானொருவன் வழுப்படல்; ஆற்றின் நிலைதளர்ந்த அற்றே -வீடு பேற்றின் பொருட்டுத் துறவுநெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந்நெறியினின்றும் தவறி வீழ்ந்தை யொக்கும்.

ஆற்றின் நிலைதளர்தலாவது, அருள்மேற்கொண்டு கொலை தவிர்ந்து கடுந்தவஞ்செய்து ஐம்புலனு மடக்கியவன் கூடாவொழுக்கத்துட்படுதல். அத்துணைக் கேடானதே நல்லவையில் வல்லான் வழுப்படல். "ஆனைக்கும் அடிசறுக்கும்." என்பது, நாப்பிசகைக் காக்குமே யன்றி அறிவுப் பிசகைக் காவாது. கூடாவொழுக்கத்தான் பயனிழந்து இகழப்படுவது போன்றே, வழுப்பட்ட வல்லானும் பதவியிழந்து இகழப்படுவான் என்பதாம். ஏகாரம் தேற்றம்.