பக்கம் எண் :

உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று.

 

உணர்வது உடையார்முன் சொல்லல் -பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையாரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று -தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்.

தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கியநடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.