பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 73. அவையஞ்சாமை

அஃதாவது, அவையின் திறத்தையறிந்து அதற்கேற்ப ஒன்றைச் சொல்லுங்கால், அதற்கு (அவ்வவைக்கு) அஞ்சாமை. அஞ்சினாற் சொற்பொழிவாற்றல் இயலாதாதலின், அதை விலக்குதற்கு இது அவையறிதலின் பின் வைக்கப்பட்டது.

 

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.

 

சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்-சொல்லின் தொகுதியை யறிந்த தூய மொழிநடையார்; வகை அறிந்துவல் அவை வாய் சோரார்-கற்றோர் கூடிய வல்லவை, அல்லவை என்னும் இருவகை அவைகளை அறிந்து, வல்லவைக்கண் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தினால் மனந்தடுமாறியும் வாய் தவறியும் வழுப்படச் சொல்லார்.

வல்லவர் கூட்டமாதலால் வல்லவை எனப்பட்டது. அவையைக் குறிக்குஞ்சொல் இக்குறளில் வேறின்மையால், 'வல்லவை' என்பதற்குத் தாங் கற்றுவல்ல நூற்பொருள் களை என்று உரைப்பது பொருந்தாது. அச்சத்தினாலென்பது அதிகாரத்தால் வந்தது. 'சொல்லின் றொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு 711-ஆம் குறளில் உரைத்தவாறுரைக்க.