பக்கம் எண் :

கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்.

 

கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார்-தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்;

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க
பூம்புன லூர ! பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்."

(பழமொழி, 7).


கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்.