பக்கம் எண் :

கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்.

 

கற்ற கற்றார்முன் செலச்சொல்லி-தாம் கற்றவற்றை அவையல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல்-தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க.

'மிக்காருள் மிக்க கொளல்' என்பதனால், 'கற்றார் முன்' என்பதற்குத் தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண் என்று பொருள் கூறப்பட்டது. 'மிக்க' என்றது, ஒரு துறைப்பட்ட உயர்ந்த பொருள்களையும் பிறதுறைப்பட்ட வேறு பொருள்களையுமாம். பல்துறைக் கல்வியுடையார் ஒரே அவையினராயும் வெவ்வேறு அவையினராயுமிருக்கலாம் வெவ்வேறு துறைக்கல்வி கற்றவர் ஒருவருக்கொருவர் இருதலைப் பரிமாற்றஞ் செய்து கொள்ளலாமென்பது, இக் குறட்கருத்து.