பக்கம் எண் :

ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

 

அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு-வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு; ஆற்றின் அளவு அறிந்து கற்க-முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க.

அமைச்சர்க்குத் தம் அரசரின் அவையிடத்துப் பொதுவாகவும் இயல்பாகவும் அச்சமிராதாகையாலும், பெரும்பாலும் தம் சூழ்வினைகளை அரசரோடேயே நிகழ்த்துவராதலாலும், இங்கு வேற்றரசர் அவையெனக் கூறப்பட்டது. முறைப்படி கற்றலாவது இலக்கணநூல் கற்ற பின்னரே அளவை நூலைக் கற்றல். அளவென்றது நான்கு முதற் பத்து வகையாகச் சொல்லப்பெறும் அளவை வகைகளை. அவை முன்னரே கூறப்பட்டன.

காட்சியுங் கருத்துமாகிய இருவகைப் பொருள்களின் இயல்பையும் அளந்தறிதற்குக் கருவியாகவுள்ள நெறிமுறைகளை, அளவையென்றது தொழிலாகுபெயர். அளவைநூல் தருக்கநூலென்றும் ஏரணநூலென்றும் பெயர்பெறும். அது சிறப்பு (வைசேடிகம்) முறை (நியாயம்) என இரு திறப்படும். இவையிரண்டும், முறையே கணாத முனிவராலும் அக்கபாதரென்னும் கோதம முனிவராலும் இயற்றப்பட்ட ஆரிய முதனூல்களாக இன்று சொல்லப்படினும், இவற்றுள் முன்னது தமிழர் கண்டதென்றும், அது ஏரணம் என்றே பெயர் பெறுமென்றும், பின்னதே அதன் வழிப்பட்ட ஆரியநூலென்றும், அறிதல் வேண்டும். சிறப்பென்னும் வைசேடிகத்திற்குத் தமிழ் ஏரணமே முதனூலென்பதை, அகத்தியத் தருக்க நுற்பாக்களை நோக்கிக் காண்க. அறிந்துகற்றலாவது, நேர்நெறிப்பட்ட தருக்க உறழ்களோடு. (வாதங்களோடு), கோணைநெறிப்பட்ட விசியுழி(செற்பம்), ஒட்டாரம்(விதண்டை), திரிப்பு (சலம்) முதலிய உறழ்களையும் ஆய்ந்தறிதல். இவ்விருகுறளாலும் அவையஞ்சாதார் செய்யவேண்டிய செயல் கூறப்பட்டது.