பக்கம் எண் :

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

 

வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்-மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு?; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்-அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு?

"எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே."


என்று தொல்காப்பியமும் (சொல். கிளவி. 61).

"ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே."


என்று நன்னூலும் (பொது. 7) கூறியவாறு, வாள் என்பது வில்வேல் முதலிய பிற படைக்கலங்களையுந் தழுவும். 'என்' என்னும் வினா ஈரிடத்தும் எதிர்மறை விடையை அவாவி நின்றது. நுண்ணிய அறிஞர் கூட்டம் நுண்ணவை. இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை.

"அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும்-நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று."


என்பது நீதிநெறி விளக்கம் (6)