பக்கம் எண் :

உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

 

கற்ற களன் அஞ்சிக் செலச்சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் -உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர்.

களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால் "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டியதில்லை. இவ்வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.

உறுப்பியலின் முதற்பகுதியான அமைச்சியல்( அதி. 64-73) முற்றும்.