பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 74. நாடு

அஃதாவது, அரசனும் அமைச்சருள்ளிட்ட குடிகளும் இருந்து வாழ்வதற்கு இன்றியமையாத ஆள்நிலத்தைப்பற்றிக் கூறுவது.

 

தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

 

தள்ளா விளையுளும்- குறையாத விளைபொருளும்; தக்காரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இல்லாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.

தள்ளாவிளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், 'சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்" (தொல். கிளவி.51) வழுவன்மையானும், "மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர்மேனின்றது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங் கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை. செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவாய் குன்றாமையும் பல்துறைப்பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும், அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.