பக்கம் எண் :

பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.

 

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிறநாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையுமாகிய பொறை யெல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வதுநாடு - அதனால், தன் அரசனுக்கு செலுத்த வேண்டிய புரவுவரி சிறிதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பண்பாட்டிற்கேற்ற) நல்ல நாடாவது.

பிறநாட்டு மக்கள் கால் நடையுடன் வந்து குடிபுகுவதற்குக் கரணியம் , பஞ்சம், கொடுங்கோல், பகையரசு புகுதல் , வெள்ளம் முதலியவற்றுள் ஒன்றாம். ' தாங்குதல்' சொந்த நாடுபோல் உணவளித்துக் காத்தல். அது நில விரிவாலும் விளைவுப் பெருக்கத்தாலும் மக்கள் பண்பாட்டாலும் ஆட்சிச் செம்மையாலும் நேர்வதாம். குடிகள் வருவாய் குன்றாமையால் வரிகொடுப்பதுங் குன்றாதாயிற்று. நாட்டார் செயல் நாட்டின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.