பக்கம் எண் :

உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.

 

உறுபசியும் -கடும்பசியும்; ஓவாப் பிணியும் - தீரா நோயும்; செறு பகையும் - அழிக்கும் பகையும்; சேராது இயல்வது நாடு - இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற ) நல்ல நாடாம்.

'உறுபசி' உழவரின்மையாலும் நீர் வளம் நிலவளமின்மையாலும் நேர்வது. 'ஓவாப்பிணி' நிலக்கேட்டாலும் நச்சுக்காற்றாலும் தட்ப வெப்ப மிகையாலும் நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. 'செறுபகை' அரசனாற்றலும் நல்லமைச்சும் படைவலியும் அரண்வலியும் துணைவலியும் இன்மையால் நேர்வது. இக்குறைகளும் கேடுகளும் இன்றேல் அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை என்பதாம்.