பக்கம் எண் :

பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.

 

பல்குழுவும் - நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு மாறுபாட்டுக் கூட்டங்களும்; பாழ்செய்யும் உட்பகையும் - அரசன் குடும்பத்துள்ளும் குடிகளுள்ளுமிருந்து நாட்டைப் பகைவர்க்குக் காட்டிக்கொடுத்துக் கேடுசெய்யும் அகப்பகைவரும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் - நாட்டிற்குள்ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலைவரும்; இல்லது நாடு - இல்லாததே (அமைதிக் கேற்ற) நல்ல நாடாவது.

பல்குழுக்களாவன: அரச அரியணையேறற்குரிய பழவிறல்தாயம் பற்றிய பல்வேறு பிரிவினைக் கூட்டங்களும் குலவியலும் மதவியலும் பற்றிய பல்வேறு பகை வகுப்புக்களுமாம். உட்பகையாவார் தந்நலம் பற்றித் தாமாக நாட்டைக்காட்டிக் கொடுப்பாரும் பகைவராற்கீழறுக்கப்படுவாருமாம். குறும்பர் காட்டரணும் மலையரணுங்கொண்ட சிற்றரசர் போன்ற கொள்ளைத்தலைவர். குறும்பு - சிற்றரண்.

குறும்படைந்த வரண்கடந்து (புறம். 79)


'உட்பகை', 'குறும்பு' என்பன ஆகுபெயர்.

ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மாந்தர் குடிகளைச் சேர்ந்த குற்றவாளிகளேயன்றி உட்பகைவராகார். மேலும், அவர் மாக்களே யன்றி மக்களுமாகார். பன்றி இறைச்சியும், புலி தோலும்,கரடி கம்பளியும், உதவுவதாலும்; அவையும் அவை போன்ற காட்டு விலங்குகளும், விலங்கினச்சாலைக்கும் (zoo) மறவட்டக் (Circus) காட்சிக்கும் விலங்குநூற்(Zoology) கல்விக்கும் பயன்படுவதாலும் அவற்றுள் யானை பல்வேறு வகையில் மாந்தனுக்குப் பணி செய்வதாலும்; காட்டுவிலங்குகள் மிக்க விடத்து அவற்றை வேட்டையாடிக் கொல்ல முடியுமாதலாலும்; அவற்றையெல்லாம் உட்பகையென்று கொள்வது பொருந்தாதென்றும், அவற்றினுங் கொடியவை சுரமண்டலம், நண்டுத்தெறுக்கால், நச்சுப்பாம்பு, கடந்தை (கதண்டு), வெறிநாய் முதலிய பிறவென்றும், அறிந்துகொள்க.