பக்கம் எண் :

கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.

 

கேடு அறியா - புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை முதலிய இயற்கையாலும், பகைவரும் கொள்ளைக்காரருமாகிய மாந்தராலும், கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றாநாடு - என்றேனும் ஒரு கால் அரிதிற் கெட்டதாயினும் வளங் குறையாத நாடே; நாட்டில் தலை என்ப - எல்லா நாடுகளுள்ளும் தலையாயதென்று கூறுவர் அறிஞர்.

நாடு கேடறியாமை கடவுள் வழிபாட்டாலும் அறவொழுக்கத்தாலும் அரசனாற்றலாலும் செங்கோலாட்சியாலும் ஆவதாம். வளம் நால்வகை நிலத்தும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளையும் உணவும் பிறவுமாகிய பொருள் மிகுதி. குன்றாமையாவது, நீர்வள நிலவள முண்மையால் முன்போன்றே விளைதல். நாட்டில் விளைவன நெல், வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை, பாக்கு முதலியன; காட்டில் விளைவன எள், பயறு, தேன், அரக்கு, சந்தனம், புனுகு காசறை (கஸ்தூரி) மு த லி ய ன; மலையில் விளைவன ஏலம், மிளகு, அகில் , மருப்பு (தந்தம்), மரம் , பொன், மணி முதலியன. கடலில் விளைவன உப்பு, மீன் , இறா , சங்கு , முத்து , பவழம், ஓர்க்கோலை முதலியன. 'அறியா' 'குன்றா' என்பன ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சும்.