பக்கம் எண் :

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

 

நாடு என்ப நாடா வளத்தன-நாடென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பிறநாட்டுப் பொருள்களின் தேவையின்றித் தமக்கு வேண்டிய பொருள் வளமெல்லாம் தம்மகத்தே கொண்டன; நாட வளம் தரு நாடு நாடு அல்ல-இங்ஙனமன்றிப் பிறநாட்டுப் பொருள்களை நாடிப்பெற்று அதனால் வளம் பெறும் நாடுகள் நாடுகளாகா.

இனி, 'நாட வளந்தரு நாடு' என்பதற்கு, பிறநாட்டுப் பொருள்களை நாடுமாறு குன்றிய வளந்தரு நாடுகள் என்றுரைப்பினுமாம். எல்லா வகையிலும் தன்னிறைவானதே தலைசிறந்த நாடென்பது கருத்து.

இக்குறட்குத் "தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர் பாற்றானே வந்தடையுஞ்செல்வத்தையுடையவற்றை நூலோர்நாடென்று சொல்லுவர்;ஆதலாற்றேடிவருந்தச் செல்வமடைவிக்கும் நாடுகள் நாடாகா." என்று உரைத்து,"நாடுதல் இருவழியும் வருத்தத்தின்மேனின்றது." என்று சிறப்புரையுங் கூறினார் பரிமேலழகர். தேடி வருந்தாமல்தானே வந்தடையுஞ் செல்வமுள்ள நாடு இவ்வுலகில் எங்குமின்மையாலும், இயற்கைவிளைபொருளையும் விளையுமிடஞ்சென்று தொகுக்க வேண்டியிருப்பதனாலும், மெய் வருத்தமில்லா வாழ்வு சோம்பலையும் நோயையும் விளைக்குமாதலாலும், அது உரையன்மையறிக. "பாடில்லாற் பயனில்லை." என்னும் பழமொழியையும்

வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த்-தாளாண்மை
தாழ்க்கு மடிகோ ளிலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துத லின்று.

என்னும் பழமொழிச் செய்யுளையும் (151) நோக்குக.