பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 75. அரண்

அஃதாவது, பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிக்கப்படாவாறும், அழிக்கப்படாவாறும், நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. இது நாட்டின் சிறந்த வுறுப்புக்களுள் ஒன்றாதலாலும், 'வல்லரணும் நாட்டிற் குறுப்பு' என்று முந்தின அதிகாரத்தில் தோற்றுவாய் செய்யப்பட்டதினாலும், நாட்டின் பின் வைக்கப்பட்டது.

 

ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

 

அரண்- இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; ஆற்றுபவர்க்கு பொருள்- மூவகை யாற்றலு முடையராய்ப் பிறர் நாட்டின்மேற் படையெடுத்துச்சென்று போர் செய்வார்க்கும் சிறந்த செல்வம்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்-அவ்வாற்றலின்றித் தம் பகைவர்க்கஞ்சித் தற்காப்புச் செய்வார்க்கும் சிறந்த செல்வம்.

மூவகையாற்றல் அறிவு, ஆண்மை,கருவி என்பன.அவற்றுட்கருவி படை, படைக்கலம், பொருள் என முத்திறப்படுவது. ஆற்றலுள்ளவர் பிறர்மேற் சென்ற விடத்து, அவர் கருவூலத்தையும் மகளிரையும் காத்தற்கு அரண்வேண்டியிருத்தலானும்; ஆற்றலில்லாதவர் வேட்டைநாயால் துரத்தப்பட்ட முயல் குழிக்குட் புகுந்து தப்புவது போல், தம் பகைவர்க்குத் தப்பிப் பதுங்குவதற்கு அரண் இன்றியமையாததாலாலும்; தாக்குவார்க்கும் தற்காப்பார்க்கும் ஒப்ப 'அரண் பொருள்' என்றார். வலியார்க்கும் அரண் வேண்டியிருத்தலை யுணர்த்த அவரை முற்கூறினார். ஆயினும், பத்தினித்தெய்வத்திற்குப் படிமைக்கல் எடுக்கவும் கனக விசயரின் செருக்கடக்கவும், வடநாடு சென்ற சேரன் செங்குட்டுவன் முப்பத்திரு மாதம் நீங்கியிருந்தும், தென்னாட்டிற் குழப்பமில்லா திருந்தமை, அவனது அனைத்திந்தியத் தலைமையையே உணர்த்தும். உம்மையிரண்டுள் முன்னது உயர்வு சிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம்.