பக்கம் எண் :

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

 

முனைமுகத்து மாற்றலர் சாய-போர்த் தொடக்கத்திலேயே பகைவர் புண்பட்டு விழுமாறு; வினைமுகத்துவீறு எய்தி-நொச்சியாரின் வினைவேறுபாடுகளாற் சிறப்புப் பெற்று; மாண்டது அரண்- பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே சிறந்த கோட்டையரணாவது.

பகைவர் அகழியை அடுத்தவுடனே பட்டுவிழுமாறு, மதில் மேலிருந்து கல்லும் அம்பும் விட்டேறும் சோனைமாரியாய்ச் சொரிதலால், 'முனைமுகத்து மாற்றலர் சாய' என்றார். தொடக்கத்திலேயே பெருந்தொகையினர் சாய்தலால், பின்னும் தாக்குப்பிடித்து நிற்றலும் பொருதலும் கூடாது பின்வாங்கியோடுவர் என்பதாம். வினைவேறுபாடுகளாவன; அகழியைக் கடக்குமுன் எய்தலும் எறிதலும் வீசுதலும்; மதிலைப்பற்றியபின், கடித்தலும் உமிழ்தலும் இறைத்தலும் எறிதலும் கோத்து வலித்தலும் கட்டுதலும் பூட்டு முறுக்குதலும், கொத்துதலும் நெட்டித் தள்ளுதலும் குத்துதலும் பொதுக்குதலும் கிழித்தலும் அடித்தலுமாகிய பொறிவினைகளும்; குத்துதலும் வெட்டுதலும் பிளத்தலுமாகிய படைவினைகளுமாம். அரண் மாண்பிற் கேற்ற பிற வுறுப்புக்கள், மதில்மேலுள்ள பதணம், ஏப்புழை, சூட்டு, ஞாயில் (ஏவறை), கொத்தளம்(காவற்கோபுரம்) முதலியனவும்; பனவர்க்குத் தெரியாது நகர்க்கு வெளியே சென்றுவர நிலத்தின் கீழமைத்த சுருங்கை முதலியனவுமாம்.