பக்கம் எண் :

உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

 

உறுபொருளும்-உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த பொருளும்; உல்குபொருளும்-நிலவாணிகத்தில் வண்டிகளிலும் நீர்வாணிகத்தில் மரக்கலங்களிலும் வரும் பண்டங்கட்கு வாங்கும் ஆயமும்; தன் ஒன்னார்த்தெறு பொருளும்-தம் பகைவரைப் போரில் வென்றபின் அவரிடம் தண்டமாகவும் திறையாகவும் வாங்கும் பொருளும்; வேந்தன் பொருள்-அரசிறையல்லாத பிறவழிகளில் அரசன் பெறும் பொருள்களாம்.

உரையோரின்மையால் வருவன பழம்புதையலும் உரிமையோரில்லாச் சொத்துமாம். எதிர்பாராது வருவன குடிகள் காணிக்கையும் நண்பர் நன்கொடையுமாம். குன்றக் குறவர் செங்குட்டுவனுக்குமுன் படைத்தவை போன்றவை காணிக்கை அவந்தி வேந்தன் கரிகால் வளவனுக்கு உவந்தளித்த தோரணவாயில் போன்றது நன்கொடை. தோற்றோடும் பகைவர் போர்க்களத்தில் விட்டுவிட்டுப்போன பொருள்களும் தெறுபொருள்களுள் அடங்கும். இம்முக்குறளாலும் அரசன் பொருளீட்டும் வழிகள் கூறப்பட்டன.