பக்கம் எண் :

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.

 

அன்பு ஈன் அருள் என்னும் குழவி-அன்பு என்னும் நற்றாயினாற் பெறப்பட்ட அருள் என்னும் பிள்ளை; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு-பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய வளர்ப்புத்தாயாலேயே பிழைக்கும்.

உயர்திணை மேலுள்ள அன்பு முதிர்ந்த விடத்தே அஃறிணை மீது அருள் பிறத்தல்போல், தொடர்புள்ள வலியார் மேலும் ஒத்தார் மேலுள்ள அன்பு முதிர்ந்த பின்பே தொடர்பில்லாத எளியார் மீது அருள் பிறத்தலால், அதை 'அன்பீன் குழவி' என்றும் அது எளியார்க்கும் பயன்படுவது பொருளுள்ள விடத்தேயாதலால் பொருளை அதற்குச் செவிலி என்றும், அது நற்றாயிடம்பொருள் பெற்று வளர்க்கும் உலகியற் செவிலி போலாதுதானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலால் 'செல்வச் செவிலி' என்றும், கூறினார். வளரும் என்னாது உண்டு என்றே கூறினமையால், பாலூட்டப் பெறாத குழவி பிழைக்காததுபோலப் பொருளொடு கூடாத அருளும் இருந்தும் இல்லாதது போல்வதால் இறக்கும் என்பதாம். அன்பை நற்றாயென்று உருவகியாமையால் இது ஒருமருங்குருவகம்.