பக்கம் எண் :

குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை-தன் கையிற் பொருளை வைத்துக்கொண்டு ஒரு வினையை மேற்கொண்டவன் அதைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்ட அற்று-ஒருவன் மலைமேலேறியிருந்து அடிவாரத்தில் நடக்கும் யானைப்போரைக் கண்டாற் போலும்.

செய்வான் என்னும் வினையால், 'ஒன்று' என்பது அதன் செயப்படுபொருளான வினை யென்பது பெறப்பட்டது. மலைமேலேறியிருந்தான் சிறிதும் அச்சமும் வருத்தமுமின்றிக் கீழ் நடக்கும் யானைப் போரைக் கண்டு களித்தாற்போல, நிரம்பச் செல்வமுள்ளவனும் சிறிதும் அச்சமும் வருத்தமுமின்றித் தக்காரைக் கொண்டு ஒரு பெருவினையைச் செய்து முடித்து மகிழ்வான் என்பதாம்.

பொது மக்கள் சேவற்போரும் தகர்ப்போரும் கண்டு களித்தது போன்றே, பண்டையரசரும் யானைப்போர்கண்டு களித்தமை,

"கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழம்-துஞ்சா
துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன்
நிழலையுந் தான்சுளிக்கும் நின்று."


என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளால் (350) அறியப்படும்.