பக்கம் எண் :

அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்.

 

தானை-படை; அடல்தகையும் ஆற்றலும் இல் எனினும்-பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும்.

இல்லெனினும் என்னும் இழிவுசிறப் பும்மை அவற்றின் இன்றியமையாமையைக் காட்டிற்று. தோற்றப் பொலிவானது. சுவடிக்கப்பட்ட தேர்களும் படாம்போர்த்த யானைகளும் அணி பூட்டிய குதிரைகளும், குடை கொடி பதாகை முதலிய கண்கவர் எடுபிடிகளும், பல்லியமும் காள வகைகளும் செய்யும் ஓசை முழக்கமும், கூடிய ஆரவாரம். படை வகுப்பு, மேற் கூறப்பட்டது. பாடு பார்த்தவுடன் பகைவர் அஞ்சும் பெருமை. தென்னாலியிராமனின் 'எட்சண் டெருமைத்தோல்' (திலகாஷ்ட மகிஷபந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல், வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மரூட்டலாம் என்றார். பதாகை-பெருங்கொடி.