பக்கம் எண் :

என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.

 

அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.