பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 78. படைச்செருக்கு

அஃதாவது, படையின் மறமிகுதி. அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.

 

தெவ்விர்-பகைவீர்!; என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-இதற்கு முன்பு என் தலைவனது வலிமையறியாது அவனுக்கு எதிர் நின்று போரேற்று அவன் வேலாற் கொல்லப்பட்டு பின்பு நடுக்கல்லில் நின்ற மறவர் பலராவர்; என் ஐ முன் நில்லன் மின்-ஆதலால், நீவிரும் அவ்வாறு நடுகல்லில் நில்லாது உம் உடலோடு நிற்க விரும்பின், தலைவனெதிரே போரேற்று நிற்றலைத் தவிர்க.

இது ஒரு மறவன் தன் தலைவன்மேல் வைத்த அன்புப் பெருக்கால், தன் மறத்தையும் தான் சேர்ந்த படையின் மறத்தையும் அவன் மேலேற்றிக் கூறியவாறு. படையின் வெற்றி படைத்தலைவன் வெற்றியாகக் கூறப்படுவது மரபாதலால், இங்ஙனங் கூறினான் என்க. போரில் இறந்த மறவனுக்குக் கல்நட்டு, அதில் அவன் பெயரும் பெருமையும் பொறிப்பது பண்டை மரபு. அச்செய்தி பொருளிலக்கணத்தில் வெட்சி என்னும் புறத் திணையின் பிற்பகுதியாகிய கரந்தையைச் சேர்ந்த துறையாகும். (தொல், பொருள்புறத். 5)

அரசனும் தலைமைப் படைத்தலைவனாகப் போருக்குச் செல்வது பண்டை வழக்கமாதலால், இங்கு 'ஐ' என்றது அங்ஙனஞ் சென்ற அரசனையுங் குறிக்கும்.

ஒரு மறவன் தன்திறத்தை மிகுத்துக் கூறுவது நெடுமொழி யெனப்படும். இதை வெட்சித் திணைக் கரந்தைப் பகுதித் துறையாகத் 'தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்' என்பர் தொல்காப்பியர் (சொல். பொருள், புறத், 5). ஐயனாரிதனார் இதை 'நெடுமொழி கூறல்' என்று கரந்தைப் படலத்துள்ளும், 'நெடுமொழி வஞ்சி' என்று வஞ்சிப் படலத்துள்ளும் அமைப்பார். இவற்றுள் முன்னது தன் அரசனை நோக்கியது; பின்னது தன் பகைவரை நோக்கியது. 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் தொல்காப்பிய வஞ்சித்துறை சிறிது வேறுபட்டது.

இக்குறள், ஒருமறவன் தன் தலைவனை உயர்த்துக் கூறும் கூற்றாயிருப்பதால், நெடுமொழியாகாது அதன் வகையே யாகும். 104-ஆம் புறப்பாட்டுப்போல் அரச வாகையாயின் படைச்செருக்காகாது.