பக்கம் எண் :

கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

 

கான முயல் எய்த அம்பினில்-காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.

இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடி கொடியடர்ந்த கானம் என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எய்த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.