பக்கம் எண் :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்-தன் கையிலிருந்த வேலைத் தன்மேல் வந்த போர்யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு, அடுத்து வந்த வேறொரு போர் யானையைக் கொல்ல வேல் தேடித் திரும்பி வருகின்ற யானை கொல்லி மறவன்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பில் தைத்திருந்த வேலைக்கண்டு பறித்து மகிழ்ச்சியடைவான்.

'களிற்றொடு போக்கி' என்றதனால் யானைகளைக் கொல்வதையே குறிக்கோளகக் கொண்ட மறவன் என்பது பெறப்படும். களிற்றொடு போக்குதலாவது களிற்றின் உயிரைப்போக்குமாறு வேலைப் போக்குதல். 'மெய் வேல்பறியா நகும்' என்றதனால், தன் மார்பில் பகைவர் வேல் தைத்ததையும் மறமிகுதியால் உணரவில்லை யென்பதும், மேன்மேலும் போர் விருப்பினன் என்பதும், அறியப்படும். இங்ஙனம் மெய்வேல் பறித்தெறிதலை 'நூழிலாட்டு' என்னும் தும்பைத் துறையென்பர் ஐயனாரிதனார். (பு.வெ. 7: 16).