பக்கம் எண் :

விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னோட்டன்றோ வன்க ணவர்க்கு.

 

விழித்தகண்-பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்தகண்; வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின்; வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ-அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!.

'அழித்து' என்பது 'அழித்தழுதாள்' குறள் (1317) என்பதிற் போல நின்றது. 'ஒட்டு' தோற்றோடல். இங்கு ஓட்டென்றது ஓட்டாகக் கருதப்படுதலை. சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்த நோக்கார் என்பதாம்.