பக்கம் எண் :

சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

 

சுழலும் இசை வேண்டி-விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார்-இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல்யாப்புக் காரிகை நீர்த்து-தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம்.

'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையான தென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை வேண்டா வுயிரார் என்றது செய்யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.