பக்கம் எண் :

உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்.

 

உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்வரின் இறப்பிற்கஞ்சாது மகிழ்ந்து போர்க்களத்திற்குச் செல்லும் மறவர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்-தம் அரசன் அதுவேண்டாமென்று தடுப்பினும் தம் மறந்தளர்தல் இல்லை.

நாள்தொறும் வருந்தியுழைக்கும் உழைப்பாளிகள் வேலைசெய்யாது சோம்பியிருத்தலை வெறுத்தல் போல, போருக்கேற்ற மறமும் உடல் திறமும் பயிற்சியும் பெற்ற மறவர் போரின்றியிருத்தலை வெறுத்தல் இயல்பே. இதை.

"போரெனின் புகலும் புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வே மல்லே மென்னார்"

(புறம். 31)

"உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"

(ஷெ 68)

"மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது"

(முல்லை: 67)

என்பவற்றால் அறிக.