பக்கம் எண் :

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

 

இழைத்தது இகவாமைச் சாவாரை- தாம் கூறின வஞ்சினம் தப்பாதவாறு, தம் குறிக்கோள் நிறைவேறாதவழிச் சாகவல்ல மறவரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே-அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற்குரியார் இவ்வுவகத்தில் யார்தான்!

'இழைத்தல்' வஞ்சினங் கூறுதல். அது இன்னது செய்யேனாயின் இன்னேனாகுக எனச் சூளுறுதல். இன்னேனாகுக என்பது என்பகைவருக்கு அடிமையாவேனாக என்பதும்,என் மீசையைக் களைந்து பெண்மைத் தோற்றத்தை மேற்கொள்வேனாக என்பதும், என் வுடமை முழுவதையும் ஒருங்கே இழப்பேனாக என்பதும், என் உயிரை விட்டு விடுவேனாக என்பதுமாகப் பலதிறப்படுவதாம். அவற்றுள் இறுதியதே இக்குறளிற் குறிக்கப்பட்டதென அறிக. ஒரு மறவன் தன் குறிக்கோளை நிறைவேற்றாது தோல்வியுறினும், தன் வஞ்சினத்தை நிறைவேற்றி விடின் அது அவன் தோல்வியை வெற்றியாக மாற்றிவிடுமாதலால், அவனை எவருங்குறை கூறுதற்கு இடமில்லையென்பதாம். சொல்லி யென்பது அவாய்நிலையால் வந்தது.