பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 79. நட்பு

அஃதாவது, படைபோல அரசனுக்கு வினையிடத்துதவும் நட்பரசர் துணையும், குடிகட்குத் துன்பக்காலத்தில் உதவும் நண்பர் உறவும்.

ஆசிரியர் இதை நட்பும் பகையும் என்றும் அவைபோன்ற குணங்களும் செயல்களும் நிலைமைகளும் என்றும் இரண்டாக வகுத்துக்கொண்டு: வெளிப்படையாகவுள்ள முன்னதை ஐயதிகாரங்களாலும் குறிப்பாகவுள்ள பின்னதைப் பன்னீரதிகாரங்களாலுங் கூறுகின்றார்.

வெளிப்படையான முற்பகுதியில் முதலதிகாரமான நட்பு என்பது இவ்வதிகாரம்.

 

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

 

நட்பின் செயற்கு அரிய யா உள-நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய உறவுகள் வேறு எவை உள்ளன?: அதுபோல வினைக்கு அரிய காப்பு யா உள-அதை அமைத்துக் கொண்டால், எடுத்துக்கொண்ட வினைமுயற்சிக்குப் பகைவரால் கேடுவராமற் காத்தற்கு அதைப்போல் அருமையான காவல்கள் வேறு எவை உள்ளன?

நாகரிக நிலையிலேனும் அநாகரிக நிலையிலேனும் ஒருவன் பிறருறவின்றி வாழ்தல் அரிது. அவ்வுறவு இயற்கை, செயற்கை என இருதிறப்படும். இயற்கையுறவு இரத்தக் கலப்பான இனவுறவு: செயற்கையுறவு மணவுறவு, தொழிலுறவு, தத்துறவு,உதவிப்பேற்றுறவு,பழக்கவுறவு, நட்புறவு எனப் பலவகைப்படும். அவற்றுள், நட்புறவென்பது உண்மையானதாகவும் வலிமையுள்ளதாகவும் வாய்த்துவிடின், இனவுறவினுஞ் சிறந்ததாகும். அத்தகைய வுறவைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பெறுவதும் பேணிக்கொள்வதும் அரிதாதலால், செயற்கரிய யாவுள நட்பின் என்றார். உண்மையான நண்பர் துன்பக்காலத்தில் உயிரையும் உதவிக்காப்பராதலின், அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு என்றார்.

"A father is a treasure, a brother a comfort, but a friend is both." என்னும் ஆங்கிலப் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது. இருவகை யுறவும் தனிப்பட்ட மாந்தர்க்குப் போன்றே, அரசுகட்கும் இன்றியமையாதனவாம். இயற்கை யுறவு சுற்றந்தழால் (53) என்னும் அதிகாரத்திற் கூறப்பட்டது. செயற்கை யுறவாகிய நட்பு இவ்வதிகாரத்திற் கூறப்படுகின்றது.

காலத்திற்கேற்பக் கட்சிமாறும் துணைவலி தொழில் பற்றிய கூட்டுறவேயன்றி நட்பன்மை யானும், அத்துணைவலியும் வலியறிதல் (48) என்னும் அதிகாரத்தின் முதற்குறளில் பெயரளவிலேயே குறிக்கப்பட்டிருத்தலானும், உண்மை நட்பு உதவி பெறாதும் தோன்றுமாதலானும், அவற்றுள், இயற்கை பிறப்பு முறையானயதூஉம் தேயமுறையா னாயதூஉமென இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின் அது சுற்றந்தழாலினடங்கிற்று; ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது துணைவலியென வலியறிதலு ளடங்கிற்று. இனி,ஈண்டுச் சொல்லப்படுவது முன்செய்த வுதவி பற்றிவருஞ் செயற்கை யாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது. என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாமை காண்க. 'அரிய' இரண்டனுள், முன்னது எளிதாய் இயலாமையையும், பின்னது பெருஞ்சிறப்பையும், உணர்த்தின.