பக்கம் எண் :

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

 

நீரவர் கேண்மை பிறை நீர-அறிவுடைய மேலோர் நட்புக்கள் வளர்பிறைத் தன்மையுடையனவாய் மேன்மேலும் வளர்ந்து வருவனவாம்; பேதையார் நட்பு மதிப்பின் நீர-அறிவில்லாத கீழோர் நட்புக்கள் தேய்பிறைத் தன்மையுடையனவாய் வரவரத் தேய்ந்து வருவனவாம்.

நீர்மையுடையான் நீரவர். நீர்மை சிறந்த தன்மை; "நீர்மையுடையார் சொலின்" (குறள் 165) என்பதிற்போல. நட்பைக் 'கேண்மை' யென்றதினால், அது இனவுறவுபோற் சிறந்ததென்பது பெறப்படும். மேலோர் நட்பு வரவர வளர்தற்கும் கீழோர் நட்பு வரவரத் தளர்தற்கும், அவரிடத்திற் பண்பாடு உண்மையும் இன்மையுமே கரணியம். 'நட்பு' ஈரிடத்தும் பால்பகா வஃறிணைப்பெயர். நட்டார் பன்மையால் நட்பும் பலவாயின.