பக்கம் எண் :

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்று நிலை.

 

நட்பிற்கு வீற்று இருக்கை யாது எனின்-நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால்; கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை-ஒருபோதும் வேறுபடாது இயன்ற வழியெல்லாம் தன் நண்பனுக்குதவி அவன் எவ்வகையிலுந் தளராதவாறு தாங்கும் உறுதியாம்.

அரியணையில் அரசிருக்கையாகிய வீற்றிருக்கை மக்கட்குள் சிறந்த நிலையைக் காட்டுதலால், நட்பின் சிறந்த நிலை இங்கு வீற்றிருக்கை யெனப்பட்டது. நிலை என்பது நீக்கமும் நிலையும் (திருவாசகம், 3:9) என்பதிற்போல உறுதியென்னும் பொருள் கொண்டது.