பக்கம் எண் :

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.

 

யாக்கை யகத்து உறுப்பு அன்புஇலவர்க்கு - இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

புறத்துறுப்பாவன இடம் பொரு ளேவல் முதலியன.

இது பரிமேலழக ருரையைத் தழுவியது.

இனி, மணக்குடவர் பரிதி காளிங்கர் உரைக் கருத்து வருமாறு :-

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலாதவர்க்குப் புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவியும், மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், மரப்பாவை போல் அழகாயிருந்தும் என்ன பயன்?

இதுவுங் கொள்ளத் தக்கதே, அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறுத் துறுப்பாகிய ஐம்பொறிகளும் கை கால் முதலிய வினையுறுப்புக்களும் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன் என்று வினவற்கிட மிருத்தலால், "அதற்கு இல்லறத்தோடு யாதுமியை பில்லாமை யறிக". என்று பரிமேலழகர் மறுத்துரைப்பது பொருந்தாது. அன்பில்லாத வுடம்பு என்பு தோற்போர்ப் பென்று ஆசிரியரும் அடுத்த குறளிற் கூறுதல் காண்க.